வீடு புகுந்து தொழிலாளியை தாக்க முயன்ற 2 பேர் கைது
திருவேங்கடம் அருகே வீடு புகுந்து தொழிலாளியை தாக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவேங்கடம்:
திருவேங்கடத்தை அடுத்துள்ள சின்னக்காளாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் குருமூர்த்தி (வயது 25), தொழிலாளி. இவர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்தனர். அவர்கள் திருவேங்கடத்தில் இருந்து வெள்ளாகுளம் விலக்கு வரை விலகிச் செல்ல இடம் கொடுக்காமல் அங்கும் இங்குமாக சாலையில் சென்றார்களாம்.
இதுதொடர்பாக குருமூர்த்திக்கும், அவர்கள் 3 பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாம். உடனே அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அய்வாய்புலிபட்டி பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ராகுல் (22), வெள்ளாகுளம் காலனியை சேர்ந்த கருப்பசாமி மகன் சரவணக்குமார் (23) ஆகியோர் மதுபோதையில் குருமூர்த்தியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரை அவதூறாக பேசி தாக்க முயன்றனர். உடனே கிராம மக்கள் கூடி 2 பேரையும் சிறை பிடித்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு தகராறில் ஈடுபட்ட ராகுல், சரவணகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.