தச்சு தொழிலாளி கொலையில் 2 பேர் கைது


சாத்தான்குளத்தில் தச்சு தொழிலாளி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளத்தில் தச்சு தொழிலாளி கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தச்சு தொழிலாளி கொலை

சாத்தான்குளம்- நாசரேத் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). தச்சு தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசாமி கோவில் குளக்கரையில் உள்ள சுடுகாட்டில் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சாத்தான்குளம் அருகே தஞ்சைநகரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கார் டிரைவரான தாவீது (24), நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த தங்கத்துரை மகன் டேனியல் செல்வன் (22) ஆகிய 2 பேரும் சேர்ந்து கண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்து, அவரது உடலை தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான தாவீது, டேனியல் செல்வன் ஆகியோர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

மது அருந்தியதை கண்டித்ததால்...

நண்பர்களான நாங்கள் இருவரும் கடந்த 22-ந்தேதி திசையன்விளை கோவில் கொடை விழாவுக்கு சென்று விட்டு இரவில் சாத்தான்குளத்துக்கு வந்தோம். பின்னர் கரையடி சுடலைமாடசாமி கோவில் குளக்கரையில் உள்ள சுடுகாட்டில் மது அருந்தினோம். அப்போது அங்கு வந்த கண்ணன், வெளியூரைச் சேர்ந்தவர்கள் அங்கு அமர்ந்து மது அருந்த கூடாது என்று கூறி எங்களைக் கண்டித்து அவதூறாக பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் பெரிய கல்லை எடுத்து கண்ணனின் தலையில் போட்டு கொலை செய்தோம். பின்னர் அடையாளம் காண முடியாதவாறு அவரது உடலில் முட்செடிகளை போட்டு தீ வைத்து எரித்தோம். எனினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்களை கைது செய்தனர்.

இவ்வாறு தாவீது, டேனியல் செல்வன் ஆகியோர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

கைதான அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான தாவீது மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

---


Next Story