5 கடைகளில் திருடிய வழக்கில் 2 பேர் கைது
5 கடைகளில் திருடிய வழக்கில் 2 பேர் கைது
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே 5 கடைகளில் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
5 கடைகளில் திருட்டு
கீழ்வேளூர் அருகே ஆழியூர் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் 3 கடைகள் உள்ளன. கடந்த 28-ந்தேதி இந்த 3 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது. அதேபோல் குருக்கத்தி பஸ் நிறுத்தம் எதிரே இருந்த 2 கடைகளிலும் பணம் திருட்டு போனது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடிவந்தனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொரவச்சேரி தனியார் கல்லூரி அருகே கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகை வெளிப்பாளையம் ராமநாயக்கன் குளத்தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகன் அஜித் (வயது 23), நாகை வெளிப்பாளையம் சிவன் தெற்கு வீதி பக்கிரிசாமி மகன் அருண்குமார் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் ஆழியூர், கூத்தூர் பகுதிகளில் உள்ள 5 கடைகளில் ரூ. 74 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.56 ஆயிரத்தை மீட்டனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.