விற்பனைக்காக வைத்திருந்த பெண் உள்பட 2 பேர் கைது
திருவண்ணாமலையில் வெளிமாநில மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி தலைமையிலான போலீசார் மத்திய பஸ் நிலையம் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கள்ளத்தனமாக மதுபானம் விற்பனைக்காக வைத்திருந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மலையரசன் குப்பம் கிராமத்தை சேர்ந்த வளர்மதி (வயது 42), சிவக்குமார் (25) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 100 வெளிமாநில மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் கள்ளத்தனமான விற்பனை செய்ய மதுபான பாட்டில்களை வைத்திருந்தனரா அல்லது வேறு நபரிடம் கொடுப்பதற்காக மதுபான பாட்டில்களை கொண்டு வந்தனரா என்று திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.