8 மொபட்டுகளை திருடிய 2 பேர் சிக்கினர்


8 மொபட்டுகளை திருடிய 2 பேர் சிக்கினர்
x

திண்டுக்கல் பூ மார்க்கெட், அரசு ஆஸ்பத்திரி பகுதிகளில் 8 மொபட்டுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

மொபட்டுகள் திருட்டு

திண்டுக்கல் பூ மார்க்கெட், அரசு ஆஸ்பத்திரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் திருடு போயின. அந்த வாகனங்கள் அனைத்தும் ஒரே நிறுவனத்தின் தயாரிப்பான மொபட் ஆகும். எனவே ஒரு கும்பல் திட்டமிட்டு திருடுவது தெரியவந்தது. இதையடுத்து மொபட் திருடர்களை கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ்எட்வர்டு மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர். மேலும் திருட்டு சம்பவங்கள் நடந்த இடங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பேரும் மொபட்டுகளை திருடுவது பதிவாகி இருந்தது.

2 பேர் கைது

அதை கொண்டு விசாரித்ததில் மொபட்டுகளை திருடியது திண்டுக்கல்லை அடுத்துள்ள ம.மு.கோவிலூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 38), ஹக்கீம்சேட் (36) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 8 மொபட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் 2 பேருக்கும் மொபட்டுகளை மட்டுமே ஓட்டுவதற்கு தெரியும் என்பதால் மொபட்டுகளை குறிவைத்து திருடி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story