ஒரு எருமை மாட்டிற்கு 2 பேர் உரிமை கொண்டாடியதால் பரபரப்பு பாசத்தை கண்டு உரியவரிடம் ஒப்படைப்பு


ஒரு எருமை மாட்டிற்கு 2 பேர் உரிமை கொண்டாடியதால் பரபரப்பு பாசத்தை கண்டு உரியவரிடம் ஒப்படைப்பு
x

போலீஸ் நிலையத்தில் ஒரு எருமை மாட்டிற்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய விவகாரத்தில் மாட்டின் பாசத்தை கண்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 54). இவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருடுபோனது.

இதனிடையே தான் வளர்த்து வந்த எருமை மாடு, கீழப்பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல்(50) என்பவருடைய வீட்டில் இருப்பதாகவும், அதை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் கொடுத்தார்.

2 பேர் உரிமை கொண்டாடினர்

இந்த புகாரை ஏற்ற காட்டுமன்னார்கோவில் போலீசார், பழனிவேலை செல்போனில் தொடர்பு கொண்டு எருமை மாட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வருமாறு கூறினர். அதன்படி அவரும், எருமை மாட்டை காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, வளாகத்தில் கட்டிப்போட்டார்.

இதையடுத்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பழனிவேல், பல மாதங்களுக்கு முன்பு தனது உறவினரிடம் இருந்த எருமை மாட்டை வாங்கி வந்து வளர்த்து வருவதாக கூறினார். ஆனால் பாலமுருகனோ, இது நான் வளர்த்து வந்த எருமை மாடுதான் என்றும், 3 மாதத்துக்கு முன்பு திருடுபோனது இதுதான் என்றும் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் திணறல்

ஒரு எருமை மாட்டிற்கு 2 பேர் உரிமை கொண்டாடிய விவகாரம் போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியது. எருமை மாட்டின் உண்மையான உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

அதன்பிறகு உண்மையான மாட்டின் உரிமையாளரை கண்டுபிடிக்க போலீசாருக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதாவது, கட்டி வைக்கப்பட்ட எருமை மாட்டை அவிழ்த்து விட்டு யாருடன் அது செல்கிறதோ, அவருக்குத்தான் அது சொந்தம் என்று பிரச்சினையை முடித்து வைக்க முடிவு செய்தனர்.

முடிவு செய்வதில் குழப்பம்

அதன்படி அந்த எருமை மாடு அவிழ்த்து விடப்பட்டது. முதலில் அந்த எருமை மாடு 2 பேரிடமும் பாசம் காட்டியது. அதாவது, இருவரையும் பார்த்து அந்த எருமை மாடு தலையையும், வாலையும் ஆட்டியது. இதனால் அந்த எருமை மாடு யாருக்கு சொந்தம் என்பதில் முடிவு செய்வதில் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது.

இதனிடையே பழனிவேல், சைகை காண்பித்து எருமை மாட்டை அழைத்தார். அடுத்த நொடியே அந்த எருமை மாடு அவருடன் சென்றது. மேலும் சில சைகைகளை அந்த மாடு செய்தது.

இதை கண்டு மெய்சிலிர்த்த போலீசார், அந்த எருமை மாட்டை பழனிவேல் கொண்டு செல்ல உத்தரவிட்டனர். அதன்படி அவர் எருமை மாட்டை கொண்டு சென்றார்.


Next Story