வெவ்வேறு சம்பவத்தில் 2பேர் தற்கொலை
ரூ.5 ஆயிரம் கடனை திருப்பி கொடுக்க முடியாததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் மனைவி, குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரூ.5 ஆயிரம் கடனை திருப்பி கொடுக்க முடியாததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் மனைவி, குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரூ.5 ஆயிரம் கடன்
முக்கொம்பு அருகே உள்ள புலிவலம் சுப்பராயன்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 46). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா. இந்த தம்பதிக்கு, 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் போதிய வருமானம் இல்லாததால் ரமேஷ் என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதில் ரூ.5 ஆயிரத்தை திரும்பி செலுத்திவிட்டார். இந்த நிலையில் மீதமுள்ள ரூ.5 ஆயிரத்தை ரமேஷ் கேட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று காலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அனலை அருகே உள்ள பிரபாகரன் என்பவரது வாழைத்தோட்டத்தில் உள்ள மின்மோட்டார் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி, குழந்தைகள்
மணிகண்டம் அருகே உள்ள கண்தீனதயாள் நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் விக்னேஷ் (30) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். விக்னேஷ் திருச்சி காஜாபேட்டையில் உள்ள அவரது மாமியார் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தினமும் மது அருந்திவிட்டு வந்ததை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விக்னேஷ் தனது தாய் தந்தை வசிக்கும் கண்தீனதயாள் நகருக்கு சென்று அவர்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து இருந்த விரக்தியில் விக்னேஷ் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.