கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் சாவு


கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் சாவு
x

கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெருமாண்டி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது 48). கும்பகோணம் கருணைகொல்லை தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (43). கூலி தொழிலாளர்களான இவர்கள் இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

நண்பர்களான இருவரும் தினமும் கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவில் உள்ள காவேரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர்

நேற்று முன்தினம் இரவு பாலகுரு, சவுந்தரராஜன் ஆகிய இருவரும் மது குடிப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது மதுபாட்டிலுடன் சானிடைசரும் வைத்திருந்தனர். இதனை கவனித்த அங்கு மதுகுடித்துக்கொண்டு இருந்தவர்கள் சானிடைசரை குடித்தால் இறந்து விடுவீர்கள் என கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் கூறியதை பாலகுரு, சவுந்தரராஜன் ஆகிய இருவரும் கண்டுகொள்ளாமல் மதுவில் சானிடைசர் கலந்து குடித்தால் கூடுதல் போதை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் மதுவில் சானிடைசரை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது.

2 பேரும் பரிதாப சாவு

இந்த நிலையில் நேற்று காலை அவர்களில் ஒருவர் படித்துறையிலும், மற்றொருவர் ஆற்றங்கரையிலும் இறந்து கிடந்தனர். கரையில் இறந்து கிடந்தவர் அருகில் ரத்தக்கறை படிந்து இருந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவர்களின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் விசாரணை

அப்போது இறந்தவர்களின் உடல்களின் அருகில் மதுபாட்டில்கள் மற்றும் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் கொடுக்கக்கூடிய சீட்டும், சில மாத்திரைகளும் கிடந்தன. அந்த மாத்திரைகளையும், தரையில் படிந்து இருந்த ரத்த மாதிரிகளையும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

கூடுதல் அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததால்தான் அவர்கள் இறந்தார்களா? அல்லது ரத்தக்கறை கிடந்ததால் வேறு ஏதும் காரணமாக அவர்கள் இறந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story