தொழிலாளி உள்பட 2 பேர் பலி
தனித்தனி விபத்து: தொழிலாளி உள்பட 2 பேர் பலி
விழுப்புரம்
கண்டாச்சிபுரம் வெள்ளக்குள தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் கலைமணி (வயது 34), கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு முத்தோப்பில் இருந்து சித்தேரிக்கரை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே திசையில் பின்னால் வந்த கார் மோதியதில் கலைமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் செஞ்சி அருகே உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 80). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள கொணக்கம்பட்டு கிராமத்தில் தெருக்கூத்து பார்த்து வருவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்து திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சுந்தரம் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.