தண்ணீர் லாரி மீது கார் மோதியதில் 2 பேர் பலி
திருச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் லாரி மீது கார் மோதியதில் 2 பேர் பலியானார்கள். 2 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் லாரி மீது கார் மோதியதில் 2 பேர் பலியானார்கள். 2 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
பிறந்த நாள் விழா
கோவை மாவட்டம், சுந்தராபுரம் ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 64). இவரது மனைவி பொற்கொடி (55). இந்த தம்பதி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டை அடுத்த பழூரில் உள்ள உறவினர் ஒருவரது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்து கொண்டிருந்தனர்.
காரை தொட்டியம் அருகே உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் ஹரிஹரன் (22) என்பவர் ஓட்டி வந்தார். காரில் வெங்கடாசலத்தின் தாயார் மனோன்மணி (83), உறவினர்களான கணேசன் மனைவி தனலட்சுமி (52), லோகேஸ்வரன் மனைவி மோனிகா (32), இவரது குழந்தைகள் கிரிஜா (6), ராய்கிருஷ் (2) உள்ளிட்டவர்கள் பயணித்தனர்.
லாரி மீது கார் மோதியது
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே கூத்தூர் என்ற இடத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நெடுஞ்சாலையின் ஓரங்களில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக எவ்வித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்றி தண்ணீர் லாரியை நிறுத்தி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த லாரியின் பின்னால் கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி உருக்குலைந்தது. இந்த விபத்தில் சிக்கிய காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர். விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
2 பேர் சாவு
இதில் வெங்கடாசலம், தனலட்சுமி ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 2 குழந்தைகள் உள்பட 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தினால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான காரை கிரேன் எந்திரத்தின் உதவியுடன் மீட்டு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.