சேத்தியாத்தோப்பில் மின்மோட்டாரை திருடிக்கொண்டு தப்பிய 2 பேர் விபத்தில் சிக்கி காயம்
சேத்தியாத்தோப்பில் மின்மோட்டாரை திருடிக்கொண்டு தப்பிய 2 பேர் விபத்தில் சிக்கி காயமடைந்தனா்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு போலீசார் நேற்று அதிகாலை ராஜீவ்காந்தி நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர். ஆனால் அதில் வந்த 2 பேர், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் போலீசாரை ஆபாசமாக திட்டிவிட்டு சென்றுள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காரில் விரட்டிச் சென்றனர். அப்போது சேத்தியாத்தோப்பு பழைய பாலம் அருகில் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் அங்கிருந்த தடுப்புக்கட்டையில் மோதி கீழே விழுந்தனர்.
இதில் அந்த 2 பேரும் லேசான காயமடைந்தனர். பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புவனகிரி அருகே மதுவாலைமேட்டை சேர்ந்த முருகன் (வயது 23), துறிஞ்சிகொல்லையை சேர்ந்த அருண்ஸ்டான்லி (22) என்பதும், மதுவாலை மேட்டில் உள்ள ஒருவரது நிலத்தில் இருந்து மின்மோட்டாரை திருடிக் கொண்டு, போலீசின் பிடியில் சிக்காமல் தப்பிய போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், அருண் ஸ்டான்லி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மின்மோட்டாரும் மீட்கப்பட்டது.