திருச்சி அருகே 2 பேர் வெட்டிக்கொலை


திருச்சி அருகே 2 பேர் வெட்டிக்கொலை
x

ஒரத்தநாட்டை சேர்ந்த 2 பேரை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள் திருச்சி அருகே பாலங்களின் கீழ் உடலை வீசி சென்றனர்.

திருச்சி

ஒரத்தநாட்டை சேர்ந்த 2 பேரை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள் திருச்சி அருகே பாலங்களின் கீழ் உடலை வீசி சென்றனர்.

வெட்டிக்கொலை

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கொத்தம்பட்டி குண்டாற்று பாலத்தின் கீழே நேற்று காலையில் அரிவாள் வெட்டு காயங்களுடன் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன. இது குறித்து அப்பகுதியினர் துறையூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

வழக்குப்பதிவு

யாரோ மர்மநபர்கள் அவரை வெட்டிக்கொலை செய்து உடலை பாலத்தின் கீழ் வீசி சென்றுள்ளனர். இது குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையானவர் யார்?, கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்

இதேபோல் திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த முசிறி - துறையூர் செல்லும் மெயின் ரோட்டில் கண்ணனூர் அருகே பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் பாலத்தின் அடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

விசாரணை

இது குறித்து அப்பகுதியினர் ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார்?, அவரை வெட்டிக்கொன்றவர்கள் யார்? என ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

துறையூர் மற்றும் தா.பேட்டை பகுதிகளில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர்களை ஒரே கும்பல்தான் வெட்டி கொலை செய்தனரா? வேறு பகுதிகளில் கொலை செய்து 2 பேரின் உடல்களை தனித்தனியாக வீசிச்சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஒரத்தநாட்டை சேர்ந்தவர்கள்

இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு தெற்கு தெரு பாலத்தில், ரத்தக்கறை உடைந்த மது பாட்டில்கள், செருப்புகள் சிதறி கிடப்பதாக ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது யாரையாவது அடித்து கொலை செய்து உடலை எடுத்து சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த பிரபு, (வயது44), ஸ்டாலின், (46) ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் கொலை செய்து உடலை திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் தா.பேட்டை பகுதிகளுக்கு எடுத்து சென்று பாலங்களின் அடியில் வீசி சென்றது தெரியவந்தது. அவர்களை கொலை செய்தது யார்?கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story