வியாபாரி உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்தில் வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
வெவ்வேறு விபத்தில் வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
வியாபாரி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வாரியங்காவு மெயின் ரோட்டை சேர்ந்தவர் முஹம்மது தாஜுதீன். இவரது மகன் பஷீர்முகமது (வயது 32). இவர் அப்பகுதியில் கறிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். கால் ஊனமுற்ற நிலையில் இருந்த அவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவரை வெளிநாட்டுக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு காரில் வந்து வழி அனுப்பி வைத்து விட்டு மீண்டும் அரியலூர் சென்று கொண்டிருந்தார்.
கார் சென்னை- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பைபாஸ் பாலம் அருகே வந்தபோது காரை ஓரமாக நிறுத்திவிட்டு பஷீர் அகமது காரில் இருந்து இறங்கி சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பஷீர்அகமதுவும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரும் படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அந்த பகுதியினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பஷீர்அகமது சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
இதேபோல் வையம்பட்டியை அடுத்த சேசலூரை சேர்ந்தவர் சேவி (55). கூலி தொழிலாளி. இவர் சைக்கிளில் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே சேசலூர் பிரிவு ரோட்டை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.