மின்சாரம் பாய்ந்து விவசாயி உள்பட 2 பேர் சாவு
வடகாடு அருகே வெவ்வேறு சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உள்பட 2 பேர் இறந்தனர்.
மின்சாரம் பாய்ந்தது
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே அணவயல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). விவசாயி. இவருக்கு சொந்தமான மாந் தோட்டம் அணவயல் பிலாக்கொல்லை பகுதியில் உள்ளது. தோட்டத்தில் எள் சாகுபடி செய்து அறுவடை முடிந்த நிலையில், தோட்டம் தரிசாக கிடந்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் இப்பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதில் சக்திவேல் தோட்டத்தின் வழியாக சென்ற மின் கம்பிகளில் ஒரு கம்பி மட்டும் அறுந்து கீழே விழுந்துள்ளது.
இதை தெரியாமல் நேற்று அதிகாலை 6.30 மணியளவில் தனது தோட்டத்தில் உழவு செய்யும் வகையில் போதுமான வகையில் ஈரப்பதம் உள்ளதா? என பார்க்க சக்திவேல் சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் அவர் மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திேலயே மயங்கிய நிலையில் கிடந்தார்.
விவசாயி சாவு
இதையடுத்து அங்கு வந்தவர்கள் சக்திேவலை மீட்டு சிகிச்சைக்காக பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலாளி பலி
வடகாடு அருகே புள்ளான்விடுதியில் பழைய பேப்பர் மில் அருகே பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான பண்ணை தோப்பு உள்ளது. இங்கு தொழிலாளியாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சித்துக்காடு பகுதியை சேர்ந்த களப்பையா (29) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் பண்ணை தோப்பின் மேலே சென்ற மின் கம்பியில் விழுந்து கிடந்த தென்னை மட்டையை அகற்ற முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி படுகாயமடைந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி களப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.