நிதி நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி
நிதி நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
திருவெறும்பூர்:
நிதி நிறுவன ஊழியர்
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் தினேஷ்(வயது 27). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் தினேஷ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூரை அடுத்த டி நகர் அருகே வந்தபோது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி ஜல்லி ஏற்றிச்சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த தினேஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார், அங்கு விரைந்து சென்று தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
இதேபோல் வையம்பட்டியை அடுத்த கிடங்குடி நாயக்கனூரை சேர்ந்தவர் பாலு(45). இவர், தனது தம்பி மகன் பிரியதர்ஷனுடன்(10) மோட்டார் சைக்கிளில் கரட்டுபட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த வேன் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பாலு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.