காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி


புதுக்கோட்டை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியாகினர். 61 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

மஞ்சுவிரட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே கல்லூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

மஞ்சுவிரட்டில் முதலில் கோவில் காளைகளும், அதன் பின்னர் உள்ளூர் காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து வெளியூரில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளி குதித்து ஓடியது. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டது

இதில் 252 காளைகளுக்கு மட்டுமே மருத்துவ குழுவினரால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. மற்ற காளைகளின் உரிமையாளர்கள் காளைகளை அவிழ்த்து விட நீண்ட நேரம் ஆனதால் ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதனால் நாலா புறமும் சுற்றி நின்ற பொதுமக்களை பார்த்து காளைகள் மிரண்டு ஓடின. சில காளைகள் பொதுமக்கள் கூட்டத்திற்குள் புகுந்து அவர்களை பதம் பார்த்தது. இதனால் போலீசாரும், விழா கமிட்டியினரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

தொழிலாளி பலி

காளைகள் முட்டியதில் 63 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 23 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் மஞ்சுவிரட்டை பார்க்க வந்த கே.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி சுப்பிரமணியன் (வயது 30) என்பவர் வயிற்றில் காளை முட்டியது. இதில் குடல் சரிந்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

போலீஸ்காரர் சாவு

இதற்கிடையே மீமிசல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த நவநீதகிருஷ்ணன் (30) என்பவர் மாற்று பணியாக கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மேலும் போலீஸ்காரர்கள் சரக்கு வேனில் நின்று கொண்டு கூட்டத்தினரை கட்டுப்படுத்தினார்கள்.

அப்போது மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்த பார்வையாளர்களில் சிலர் மஞ்சுவிரட்டு திடலுக்குள் சென்றனர். இதனை கண்ட நவநீதகிருஷ்ணன் அவர்களை அப்புறப்படுத்த சரக்கு வேனில் இருந்து இறங்கி அவர்களை திடலில் இருந்து வெளியே செல்லும்படி கூறினார். அப்போது அங்கிருந்து வந்த காளை நவநீதகிருஷ்ணன் நெஞ்சில் முட்டி தூக்கி எறிந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

பரிசு

மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டை புதுக்கோட்டை, அரிமளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து கண்டு களித்தனர். மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story