செஞ்சி, திருக்கோவிலூர் அருகே நடந்த தனித்தனி விபத்தில் தபால் ஊழியர் உள்பட 2 பேர் பலி


செஞ்சி, திருக்கோவிலூர் அருகே நடந்த  தனித்தனி விபத்தில் தபால் ஊழியர் உள்பட 2 பேர் பலி
x

செஞ்சி, திருக்கோவிலூர் அருகே நடந்த தனித்தனி விபத்தில் தபால் ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

பஸ் மோதல்

செஞ்சியை அடுத்த கலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தன்(வயது 65). ஓய்வு பெற்ற தபால் ஊழியரான இவர் நேற்று இரவு செஞ்சியில் இருந்து கலையூருக்கு பஸ்சில் வந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது செஞ்சியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த அரசு பஸ் கந்தன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முன்றனர். தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் அவர்களை சமாதானம் செய்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாயி பலி

திருக்கோவிலூர் அருகே உள்ள சீர்ப்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் (55), விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மணலூர்பேட்டைக்கு மொபட்டில் புறப்பட்டார். மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆறு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ரத்தினம் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரத்தினத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரத்தினம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்தியதாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெரியமணியந்தல் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மீது மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story