ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரிடம் 9 பவுன் நகை பறிப்பு


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரிடம் 9 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 7:21 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரிடம் 9 பவுன் நகை பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரிடம் 9 பவுன் நகை பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியர்

ஓட்டப்பிடாரம் பகுதிகளில் உள்ள சாலையில் தினமும் காலை மற்றும் மாலையில் சிலர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரத்தில் இருந்து குறுக்குசாலை செல்லும் சாலையில் ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி (72) என்பவர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது குறுக்குச்சாலையில் இருந்து ஓட்டப்பிடாரம் நோக்கி மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் அவரை வழிமறித்து புளியம்பட்டிக்கு செல்வது எப்படி? என்று வழிகேட்டனர். அப்போது அவர் கையில் அணித்திருந்த மோதிரத்தை பிடுங்க முயற்சி செய்தனர்.

7 பவுன்

இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டினர். இதில் நிலைகுலைந்த தலைமை ஆசிரியரிடம் இருந்து 2½ பவுன் மோதிரத்தை பிடுங்கி சென்றனர்.

தொடர்ந்து மர்ம நபர்கள் ஓட்டப்பிடாரத்தை நோக்கி சென்றனர். அங்கு கோர்ட்டு அருகே நடைப்பயிற்சி சென்ற ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் மாடசாமி (60) என்பவரிடம் அந்த கும்பல் நகைகளை பறிக்க முயற்சி செய்தனர். அப்போது மர்ம கும்பல் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த இருந்த 3 பவுன் சங்கிலி, 2½ பவுன் கைச்செயின், 1½ பவுன் மோதிரம் ஆகிய 7 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

மேலும் கொள்ளையர்களைப் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், சதீஷ் நாராயணன் ஆகியோர் தனிப்படை அமைக்கப்பட்டு ஓட்டப்பிடாரம்- நெல்லை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், புளியம்பட்டியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். விடுதியில் இருந்த தூத்துக்குடியை சேர்ந்த மகாராஜா (19) மற்றும் இருவரை போலீசார் கைது செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் திருடப்பட்ட நகையை மேலும் இருவர் விற்பனைக்காக கொண்டு சென்று இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story