பனவடலிசத்திரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்:வியாபாரி உள்பட 2 பேர் பலி
பனவடலிசத்திரம் அருகே, 2 மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வியாபாரி உள்பட 2 பேர் இறந்தனர். மேலும் ஒரு வாலிபருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே, 2 மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வியாபாரி உள்பட 2 பேர் இறந்தனர். மேலும் ஒரு வாலிபருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இரும்பு வியாபாரி
தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள தெற்கு பனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் செல்லச்சாமி.
இவரது மகன் மணிகண்டன் (வயது 36). கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
இவர் பனவடலிசத்திரம் பஜாரில் பொருட்களை வாங்குவதற்காக வந்தார். அங்கு பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
மோட்டார்சைக்கிள்கள் மோதல்
நெல்லை- சங்கரன்கோவில் சாலையில் பனவடலிசத்திரத்தை அடுத்த பசும்பொன் நகர் அருகே தெற்கு பனவடலிசத்திரத்திற்கு திரும்ப முயன்றார்.
அப்போது சங்கரன்கோவிலில் இருந்து நெல்லையை நோக்கி சின்னகோவிலான்குளத்தை சேர்ந்த பூசைப்பாண்டி மகன் முருகேசன் என்ற முருகன் (25), பனவடலிசத்திரம் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் சுபாஷ் (24) ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள், மணிகண்டன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
2 பேர் சாவு
இதில், 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முருகேசன், சுபாஷ் ஆகியோர் அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.
ஆனால் வரும் வழியில் முருகேசன் பரிதாபமாக இறந்தார். சுபாசுக்கு காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.
குடும்பம்
இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த மணிகண்டனுக்கு தங்கதுரைச்சி என்ற மனைவியும், உதிஷ் (13) என்ற மகனும், மஹதி என்ற மகளும் உள்ளனர்.
பலியான முருகேசன், பெரியகோவிலான்குளத்தில் உள்ள ஒரு மோட்டார்சைக்கிள் ஷோரூமில் விற்பனை பிரிவில் வேலைபார்த்து வந்தார்.
2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.