சாலை விபத்தில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்
சாலை விபத்தில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனா்.
நொய்யல் குறுக்குச்சாலை அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சுதா (வயது 47). இவர் வேட்டமங்கலம் பி.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளிக்கு தினமும் பணிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் சுதா வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி ஜெகதாபி அருகே கருநல்லியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராத விதமாக சுதா ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுதா கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் லோகநாதன் மீது வழக்குப்பதிந்து, அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
தோகைமலை அருகே உள்ள சேப்ளாபட்டியை சேர்ந்தவர் தங்கராசு (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அ.உடையாபட்டி-மாகாளிப்பட்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இனுங்கூரை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தங்கராசு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தங்கராசு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.