வாகனம் மோதி விவசாயி உள்பட 2 பேர் பலி
புவனகிரி அருகே நடந்த தனித்தனி விபத்தில் வாகனம் மோதி விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்
புவனகிரி
விவசாயி
புவனகிரி அருகே உள்ள தர்மநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் செல்லதுரை(வயது 38). விவசாயியான இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் புவனகிரி-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். கிளாவடிநத்தம் அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் செல்லதுரை ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து செல்லதுரை மனைவி வித்யாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகிறார்.
தொழிலாளி பலி
புவனகிரி அருகே உள்ள கிளாவடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு(70). தொழிலாளியான இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் கிடாரிநத்தம் கிராமத்தில் இருந்து புவனகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். கிளாவடிநத்தம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது புவனகிரியில் இருந்து சேத்தியாதோப்பு நோக்கி வந்த கார் செல்வராசு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து செல்வராசு மனைவி கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.