அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலி


அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 27 April 2023 1:00 AM IST (Updated: 27 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

மேட்டூர்;-

மேட்டூரில் லாரி மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி மீது மோதியது

சேலம் மாவட்டம், மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சேலத்துக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சை மேச்சேரி அமரத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 30) ஓட்டி வந்தார்.

மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.

அதே நேரத்தில் அந்த வழியாக காங்கேயத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நெல் மூட்டை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று முன்னால் சென்றது. அந்த லாரியின் பின்னால் தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி ெநாறுங்கியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மேச்சேரி செங்காட்டூரை சோ்ந்த அரசு பஸ் டிரைவர் விஜயகுமார் மனோகரன் (48), திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூரை சேர்ந்தவரும், மேட்டூரில் பானிபூரி கடை நடத்தி வந்தவருமான வெங்கடேஷ் (45) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த செம்மாண்டப்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (36), மேட்டூரை சேர்ந்த சந்தோஷ் குமார் (38), ஹரிஸ் (28), பரத் (26), சுந்தர்ராஜன் (45), வைத்தீஸ்வரி (26), சேலத்தை சேர்ந்த வினோத் (27), மேட்டூர் சேலம்கேம்ப் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (28), கோணகப்பாடியை சேர்ந்த சீத்தாராம் (47), கருமலைக்கூடலை சேர்ந்த முருகன் (55), மேச்சேரியை சேர்ந்த ரமேஷ் (37), தனியார் பஸ் டிரைவர் சக்திவேல் ஆகிய 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

வழக்குப்பதிவு

தகவல் அறிந்து வந்த கருமலைக்கூடல் போலீசார் மற்றும் மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மேட்டூர் மற்றும் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story