காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை வழக்கு:தந்தைக்கு எதிராக கோர்ட்டில் சாட்சியம் அளிக்க கூடாது பெண்ணை மிரட்டிய தாய் உள்பட 2 பேர் கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை வழக்கில், கோர்ட்டில் சாட்சியம் அளிக்க கூடாது என்று மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காதல் திருமணம்
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது 28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும், அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாயை சேர்ந்த சங்கரின் மகள் சரண்யா (22) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு ஜெகன் வீட்டில் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சரண்யா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதம் காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த 21.3.2023 அன்று ஜெகன் டேம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் வந்தபோது மாமனார் சங்கர் உள்பட 3 பேர் சேர்ந்து ஜெகனை வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் சங்கர் உள்பட 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். தற்போது சரண்யா கணவரின் வீட்டில் வசித்து வருகிறார்.
கொலை மிரட்டல்
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி மாலை சரண்யா வீட்டில் இருந்த போது அவரது தாயார் ரத்தினம்மாள் (38) மற்றும் சிலர் அங்கு வந்தனர். அப்போது சரண்யாவிடம் அவர்கள், இந்த வழக்கு விசாரணைக்காக நீ கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க கூடாது என கூறினர். இதற்கு சரண்யா மறுக்கவே, அவர்கள் சரண்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக சரண்யா, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி சரண்யாவின் தாயார் ரத்தினம்மாள், உறவினரான பாறைகொட்டாயை சேர்ந்த பூமணி (34) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக பாறைகொட்டாய் பகுதியை சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதான 2 பேர் மீதும் ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.