நர்சின் கணவர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் நர்சின் கணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வெவ்வேறு சம்பவங்களில் நர்சின் கணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நர்சின் கணவர்
திருச்சி திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 32). இவருடைய மனைவி வெண்ணிலா திருச்சியில் உள்ள ஒரு கிளினிக்கில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், ராகவன் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வெண்ணிலா வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த ராகவன் திடீரென்று அறைக்கு சென்று சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரபாபு (25). டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர், அரசு வேலையும் தேடி வந்தார். மேலும் மேற்படிப்பு படிக்கவும் திட்டமிட்டு இருந்தார்.
இந்தநிலையில் சரியான வருமானம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன் அரசு வேலையும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்த நாகேந்திர பாபு சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.