பொக்லைன் ஆபரேட்டர் உள்பட 2 பேர் கைது
பொக்லைன் ஆபரேட்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள நிலம் தொடர்பாக முஸ்லிம்களுக்கும், தனியார் சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் உள்ளது. மேலும் வக்பு வாரியத்திலும் இது தொடர்பான பிரச்சினை விசாரணையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 15-ந்தேதி அதிகாலை சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த தர்கா மற்றும் கல்லறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் இடித்துவிட்டனர். இதுதொடர்பாக முஸ்லிம் அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருச்சி பெட்டைவாய்த்தலை பகுதியை சேர்ந்த பொக்லைன் எந்திர ஆபரேட்டர் சுரேஷ்குமார் (வயது 35), அவருக்கு துணையாக சென்ற கரூர் மாவட்டம் குளித்தலை நங்கவரம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.