வெள்ளத்தில் சிக்கிய கப்பல் ஊழியர் உள்பட 2 பேர் பிணமாக மீட்பு


பணகுடி அருகே வெள்ளத்தில் சிக்கிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி அருகே வெள்ளத்தில் சிக்கிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டம் பணகுடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 23-ந் தேதி பலத்த மழை பெய்தது. இதனால் குத்திரப்பாஞ்சான் அருவி அருகே உள்ள கன்னிமாறன் தோப்பு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்போது அந்த ஓடையில் குளித்து கொண்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதில் 40-க்கும் அதிகமானோர் ஓடையின் இரண்டு கரைகளிலும் ஏறி உயிர் தப்பினார்கள்.

2 பேர் மாயம்

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தை சேர்ந்த மோட்சம் மகன் பெரியநாயகம் (வயது 27) உள்பட 7 பேர் ஓடையின் நடுப்பகுதி வெள்ளத்தில் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கயிறுகட்டி 5 பேரை மீட்டனர். நல்லூரை சேர்ந்த சரவணன் வெள்ளத்தில் இருந்து கரை ஏறி பத்திரமாக திரும்பினார். பெரியநாயகம் மட்டும் மாயமாகி இருந்தார்.

மேலும் பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் கொமந்தான் ஊரை சேர்ந்த பூலுடையார் மகன் இசக்கிமுத்து (40) என்பவர் ஊருக்கு அருகே உள்ள அனுமன் நதி தரைபாலத்தை கடக்கும் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

பிணமாக மீட்பு

இவர்கள் 2 பேரையும் வள்ளியூர் தீயணைப்பு துறையினரும், பணகுடி போலீசாரும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஓடை அருகே சிக்கி இறந்த நிலையில் பெரியநாயகம் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

அதுபோல் தளவாய்புரம் கிழக்கே அனுமன் நதி ஆற்றின் ஓரம் பிணமாக கிடந்த இசக்கிமுத்து உடலையும் மீட்டனர். இதையடுத்து 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கப்பல் ஊழியர்

வெள்ளத்தில் சிக்கி இறந்த பெரியநாயகம் கேட்டரிங் படித்து கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story