தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நெய்வேலி,
நெய்வேலி அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சிவரஞ்சனி, கணவரிடம் கோபித்து கொண்டு, அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் மனமுடைந்த அலாவுதீன் விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அலாவுதீன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு
சேத்தியாத்தோப்பு அருகே மேல்வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (60). இவரது மனைவி கடந்த 6 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் தியாகராஜன் காணப்பட்டார். இந்த நிலையில் தியாகராஜன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.