வக்கீல் அலுவலகத்தில் பணம் திருட்டு-பெண் உள்பட 2 பேர் கைது


வக்கீல் அலுவலகத்தில் பணம் திருட்டு-பெண் உள்பட 2 பேர் கைது
x

சேலத்தில் வக்கீல் அலுவலகத்தில் பணம் திருட்டு போனது தொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சேலம் வின்சென்ட் அருகே உள்ள உடையப்ப செட்டி காலனியை சேர்ந்தவர் வக்கீல் சரவணன் (வயது 49). இவருடைய அலுவலகம் அதே பகுதியில் உள்ளது. சரவணன் நேற்று காலை தனது அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ரூ.23 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் கொடுத்தார். அதன்பேரின் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா திருப்பி வைக்கப்பட்டிருந்தது. எனவே அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராவை திருப்பிவைத்து விட்டு நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சீலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் வக்கீல் சரவணன் வீட்டில் திருடியது கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜதுரை (29), அவரது உறவினர் செல்வி (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டு தொடர்பாக புகார் கொடுத்த 5 மணி நேரத்தில் அதில் ஈடுபட்டவர்களை பிடித்த அஸ்தம்பட்டி போலீசாரை கமிஷனர் நஜ்முல் ஹோடா பாராட்டினார்.


Next Story