பெண் உள்பட 2 பேர் தற்கொலை
பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திருச்சி வரகனேரி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் திருச்சியில் உள்ள ஒரு இரும்பு நிறுவனத்தில் லோடு மேனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துமணி (வயது 30). இவர்கள் 9 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மணிவண்ணன் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். சம்பவத்தன்று மணிவண்ணன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் மனமுடைந்த முத்துமணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருவெறும்பூர் கீழக்குறிச்சி முடுக்குப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி சுதா (44). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனது மகன் சூர்யாவுடன் கடந்த 18 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்தநிலையில் அவர் அதிகமாக கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் மனமுடைந்த சுதா சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.