2 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு
தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால் 2 பேரை மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது
சீர்காழி அருகே உள்ள எடமணல் பகுதியை சேர்ந்த முருகன் என்கிற முக்கூட்டு முருகன் மற்றும் தென்னங்குடி பகுதியை சேர்ந்த சூர்யா ஆகிய இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். இவர்கள் இருவரும் இனிமேல் எந்த தவறும் செய்ய மாட்டோம் என்று கூறி எழுதி கொடுத்ததன்பேரில் நன்னடத்தை அடிப்படையின் கீழ் ஜெயிலில் இருந்து வெளியே வந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தை அடிப்படையின்கீழ் அவர்கள் ஒரு ஆண்டுக்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடக்கூடாது. ஆனால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாலும், தொடர்ந்து ஈடுபடக்கூடும் என்பதாலும் அவர்கள் வெளியே வரமுடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீர்காழி போலீசார் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தன்பேரில் சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, அவர்கள் இருவரையும் வெளியே வரமுடியாத வகையில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் அதற்கான உத்தரவு கடிதத்தை திருச்சி சிறையில் உள்ள அதிகாரிகளிடம் நேரில் வழங்கினர்.