திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குறைதீர்வு நாள் கூட்டத்தையொட்டி தீக்குளிக்க முயற்சிப்பது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வரும் 4 பாதைகளில் நுழைவு பாதையை தவிர மற்ற 3 பாதைகள் போலீசார் மூலம் பேரிகார்டுகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் மனு அளிக்க வருபவர்களை தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். இருப்பினும் வெவ்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் தாலுகா நாரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாபு மனைவி குமுதா. அவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் திடீரென தான் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், எனது கணவர் அவரது பெயரில் இருந்த 2 ஏக்கர் நிலத்தை எங்களது 2 மகள்கள் பெயரில் எழுதி வைத்து உள்ளார்.
இந்த நிலையில் அந்த நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். அடி ஆட்களை கொண்டு கொலை முயற்சியும் மேற்கொள்கின்றனர். மேலும் அவர்கள் எனது மகளிடம் தகாத முறையில் நடந்து கொள்கின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எங்களையும், எங்கள் நிலத்தையும் அவர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்று தீக்குளிக்க முயன்றதாக கூறினார். இதையடுத்து அவரை போலீசார் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விவசாயி
கலசபாக்கம் அருகில் உள்ள டி.கல்லேரி பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 57), விவசாயி. இவர் நேற்று தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோல் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
தொடர்ந்து போலீசார் நடத்தி விசாரணையில், நான் ஒருவரிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது நிலத்தை அடமானமாக வைத்து ரூ.2 லட்சம் பணம் வாங்கி இருந்தேன். தற்போது எனது நிலத்தின் பட்டா பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இதையறிந்த நான் ஊர் பெரியவர்கள் மூலம் அந்த நபரிடம் பேசி ரூ.7 லட்சம் வழங்கியும் அவர் நிலத்தின் பட்டாவை திருப்பி கொடுக்காமல் உள்ளார். மேலும் அந்த நபர் கூடுதலாக ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். எனவே அவரிடம் இருந்து எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார்.
கொலை மிரட்டல்
தண்டராம்பட்டு தாலுகா மல்லிகாபுரம் சாத்தனூர் அணை பங்கு உள்நாட்டு மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தலைவர் மனோண்மணி தலைமையிலான நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
2017-ம் ஆண்டு முதல் சாத்தனூர் அணை மகளிர் கூட்டுறவு சங்கத்தின் சார்பாக குப்பநத்தம் நீர்த்தேக்க அணையில் அரசு உத்தரவின் பேரில் அரசு நீர் நிலையில் நிர்ணயித்த தொகையை செலுத்தி கடந்த 2022-ம் ஆண்டு வரை மீன் பிடிக்கும் தொழிலை நடத்தினோம். அக்காலத்தில் நீர்நிலைகள் முழுமை அடையாததாலும், கொரோனா காலத்தில் மீன்பிடி செய்யாததால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
முதலீடு செய்த தொகையை எடுக்க முடியாததால் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகி கால நீடிப்பு கேட்டதன் பேரில் எங்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை கோர்ட்டு 2 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. அதன்பேரில் அதில் உள்ள மீன்களை பிடித்து வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி 20 பேர் கொண்ட கும்பல் வந்து எங்களை மீன் பிடிக்க கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தனர். மறுநாள் 50 பேர் வந்து மிரட்டினர். எனவே கோர்ட்டு உத்தரவின் படி நாங்கள் தொடர்ந்து மீன் பிடி தொழில் செய்யவும், எங்களை தடுப்பவர்களையும் மற்றும் கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆரணி
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இதில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, பசுமை வீடு, குடும்ப அட்டை, வீடு, நிலம் அபகரிப்பு உள்ளிட்ட 47 குறை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் க.பெருமாள், தாசில்தார் ஆர்.ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.