மோட்டாா் சைக்கிளில் செல்பவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


மோட்டாா் சைக்கிளில் செல்பவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

வேப்பூர் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் செல்பவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

ராமநத்தம்,

வழிமறித்து தாக்குதல்

சிறுபாக்கம் நத்தக்காட்டை சேர்ந்தவர் மருதமுத்து மகன் மதியழகன் (வயது 21). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் சிறுபாக்கத்தில் இருந்து வேப்பூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை விளாம்பாவூர் சிப்காட் அருகே 2 பேர் வழிமறித்து கட்டையால் தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மதியழகன் (50) தனது மனைவி, மகனுடன் ஒரு மோட்டார் சைக்கிளிலும், 15 வயது மகளை உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்களிலும் அழைத்து வந்தார்.

வேப்பூர் அருகே கூத்தக்குடி ரெயில் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் கீழ் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த 2 பேர் மதியழகனின் உறவினர் வந்த மோட்டார் சைக்கிளை மறித்து, அவரை தாக்கினர். பின்னர் மோட்டார் சைக்கிளை பறித்தனர். இதையடுத்து மதியழகனின் மகளை கடத்தி சென்றதோடு அவளிடம் இருந்து செல்போன் மற்றும் கொலுசை பறித்து விட்டு விருத்தாசலத்தில் விட்டு விட்டு சென்று விட்டனர்.

2 பேர் கைது

இதுகுறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் 2 பேரிடமும் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் பறித்தது ஒரே கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து மதியழகன் மற்றும் சிறுமியிடம் இருந்து பறித்து சென்ற செல்போன்களின் சிக்னல்களை வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வேப்பூா் போலீசார் சென்னை சென்று அங்கு பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் விருத்தாசலம் இந்திரா நகரை சேர்ந்த தாஜ்வ்தீன் மகன் கபாரூதீன் (23), அசோக்குமார் மகன் விஷ்வா (23) என்பதும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் இரவு நேரங்களில் சாலைகளில் தனியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை மறித்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கபாரூதின், விஷ்வா ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story