வீச்சரிவாளை காட்டி வாலிபரிடம் பணத்தை பறித்த 2 பேர் கைது


வீச்சரிவாளை காட்டி வாலிபரிடம் பணத்தை பறித்த 2 பேர் கைது
x

கரூரில் வீச்சரிவாளை காட்டி வாலிபரிடம் பணத்தை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர்

பணம் பறிப்பு

கரூர் கோதூர் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 21). இவர் அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாளை காட்டி மிரட்டி வீரமணி சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து வீரமணி அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அருகம்பாளையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.

20 செல்போன்கள் பறிமுதல்

விசாரணையில் அவர்கள் வெங்கமேடு செல்வ நகரை சேர்ந்த கார்த்திக் என்பதும் மற்றொருவர் திருப்பூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது வீச்சரிவாள் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 20 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் 2 பேரும் வீரமணியிடம் வீச்சரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கூறுகையில், வழிப்பறி, திருட்டு மற்றும் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் கரூர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 9498181222 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் 9498100780, 04324-296299 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Next Story