வெளிமாநில மதுவிற்ற 2 பேர் கைது
ஜோலார்பேட்டை பகுதியில் வெளிமாநில மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, அமுதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை ஜங்ஷன் புதுஓட்டல் தெரு பகுதியில் வெளிமாநில மதுபாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சான்பாஷா (வயது 40) என்பவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சி காந்திநகர் பகுதியில் ரவி என்பவரின் மனைவி மலர் (41) தனது வீட்டின் பின்புறம் வெளிமாநில மதுபாக்கெட்டு மற்றும் சாராயம் பதுக்கி வைத்து விற்ற போது போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மதுபாக்கெட்டு, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.