காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் 3-வது பஸ் நிறுத்தம் அருகே சோதனை சாவடி வளாகத்தில் திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருமங்கலம் பகுதியில் இருந்து திருநகரை நோக்கி வந்த ஒரு கார் போலீசாரை கண்டதும் பின்னோக்கியது. அதைக் கண்ட போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அந்த காரை நிறுத்தி காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னாக தகவல்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் காருக்குள் சோதனையிட்டனர். அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலைகள் மூடை, மூடையாக இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 420 கிலோ எடை கொண்ட 48 புகையிலை மூடைகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் புகையிலை கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் கரூர் வையாபுரி நகரை சேர்ந்தமுத்துப்பாண்டி(வயது 26), கரூர் செங்குந்தபுரம் ரோடு பகுதியை சேர்ந்ததினேஷ் குமார் (33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.