பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது
குளச்சலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது
குளச்சல்,
குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி மற்றும் போலீசார் குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குளச்சல் மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்ற போது அங்கு சாலையோரம் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
விசாரணையில் அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் மச்சிய சிமாதவை சேர்ந்த சிகுகுமார் (வயது26) மற்றும் ஒடிசா மாநிலம் அடுவன் பகுதியை சேர்ந்த தபான்குமார் (32) என்பதும், இவர்கள் குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலம் விற்க முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.