பழிக்குப்பழியாக 2 பேர் வெட்டிக்கொலை
தி.மு.க. பெண் நிர்வாகி கொலைக்கு பழிக்குப்பழியாக 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் உடையனாம்பட்டியை சேர்ந்தவர், சந்திரசேகர். இவருடைய மனைவி ராக்கம்மாள் (வயது 52). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி. தி.மு.க. மகளிர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். இவர்களுக்கு சூரியபிரகாஷ் (20) உள்பட 2 மகன்கள் உள்ளனர்.
ராக்கம்மாள் கடந்த மார்ச் மாதம் குடும்ப பிரச்சினையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த சபரிமலை (36) என்பவர், தற்போது ஜாமீனில் வெளியே வந்திருந்தார். குலசேகரநல்லூரில் தன்னுடைய உறவினரான ரத்தினவேல்பாண்டியன் (32) வீட்டில் தங்கி இருந்தார்.
இரட்டை கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சபரிமலை, ரத்தினவேல்பாண்டியன் ஆகிய 2 பேரும் நேற்று அதிகாலை அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே காட்டுப்பகுதியில் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தனர்.
அதுபற்றி தகவலறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் சபரிமலை, ரத்தினவேல்பாண்டியன் இருவரும் கழுத்து அறுக்கப்பட்டும், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை ராக்கம்மாள் கொலைக்கு பழிக்கப்பழியாக நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
5 பேர் மீது வழக்குப்பதிவு
கொலை செய்யப்பட்ட ரத்தினவேல் பாண்டியனின் சகோதரர் மணிகண்டன், அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் ராக்கம்மாளின் குடும்பத்தினர், உறவினர்கள் என 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை கோர்ட்டில் சரண்
இதற்கிடையே இந்த இரட்டை கொலை தொடர்பாக ராக்கம்மாளின் 2 மகன்களும், திருச்சுழியை சேர்ந்த முகேஷ்குமார் (23) என்பவரும் மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சந்தானகுமார் உத்தரவிட்டார். பின்னர் 3 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.