துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி - புதிய வகை கொரோனாவா என கண்டறிய பரிசோதனை
துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பி.எப்.7 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது.
இந்த புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து தமிழகம் அனைவருக்கும் 100 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 3 பயணிகள் சீனாவில் இருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்துள்ளனர்.
அவர்களுக்கு நேற்று ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டத்தில், 36 வயது பெண்ணுக்கும், ஒரு குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் 3 பேரையும் வீட்டில் விட்டு சென்றவர், காரில் சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க சொல்லியுள்ளோம்.
தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் முடிவுகள் 4 அல்லது 5 நாட்களில் கிடைக்கும். அதன் பின்னரே அவர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என கண்டறிய முடியம் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த 2 பேர் துபாயில் இருந்து சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 பேருக்கும் புதிய வகை கொரோனாவா அல்லது வேறு வகையா என கண்டறிய மாதிரிகளை அனுப்பி பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் கொரோனோ தொற்றுக்கு உள்ளான 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.