தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரெயிலில் அடிபட்டு சாவு
வளத்தூர்- குடியாத்தம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 60 வயது தக்க முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பா சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று ஆம்பூரை அடுத்த மேல்பட்டி ரெயில் நிலையத்தில் உள்ள யார்டு பகுதியில் சுமார் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது கேரள மாநிலம் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து டாடா நகர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் வலது கையில் குமுதா என்று பச்சை குத்தி உள்ளார். அவர் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.