நகை பாலிஷ் போட்டுத்தருவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட 2 பேர் பிடிபட்டனர்
மணப்பாறை அருகே நகை பாலிஷ் போட்டுத்தருவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட 2 பேர் பிடிபட்டனர்
மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் ராணி சந்திரிகா. இவரது மகள் சந்திரகாந்தா (வயது 24). சம்பவத்தன்று இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது, அங்கு வந்த வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் வெள்ளி மற்றும் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர், அப்போது சந்திரகாந்தா தனது வெள்ளி மோதிரத்தை பாலிஷ் போட்டு தருமாறு கூறி கொடுத்தார். இதில் வெள்ளிமோதிரத்தில் அழுக்குள் நன்றாக போனது. இதனையடுத்து 2¼ பவுன் தங்க சங்கிலியை கழற்றி கொடுத்தார். அதனை பாலிஷ் போடுவதாக கூறி திராவகத்தில் போட்டவுடன் சங்கிலி அதில் கரைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாயும், மகளும் கூச்சல் போட்டனர். பொதுமக்கள் இருவரையும் பிடித்து மணப்பாறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் இருவரும் பீகார் மாநிலம், சபேல் மாவட்டம், ரகுநாத்பூர் பகுதியை சேர்ந்த ரகுநந்தன் ராம் (32), மற்றொருவன் 14 வயது சிறுவன் என தெரியவந்தது. ரகுநந்தன் ராமை பொதுமக்கள் தாக்கியதால் கையில் காயம் ஏற்பட்டிருந்ததையடுத்து போலீசார் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.