இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக 2 பேர் கைது
மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணப்பாறை, செப்.5-
மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனம் திருட்டு
மணப்பாறை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 30-ந் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது இவரது இருசக்கர வாகனம் திருட்டுபோனது. இதுகுறித்து சரவணன் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திருச்சி சாலையில் கல்லறை தோட்டம் அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு தனது இருசக்கர வாகனம் பதிவு எண் அகற்றப்பட்டு நிற்பதை, சரவணன் கண்டார். அந்த வாகனத்தை ஓட்டி வந்த குமரபட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரிடம் விசாரித்தபோது, அந்த வாகனத்தை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ரூ.4 ஆயிரத்துக்கு வாங்கியதாகவும், வாகனத்துக்கு ஸ்டிக்கர் ஒட்ட வந்ததாகவும் கூறியுள்ளார்.
அடகு வாங்கி வைத்துள்ளதாக...
இது பற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்த சரவணன், செல்வத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரிடமிருந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், முருகேசனை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கு 29 இருசக்கர வாகனங்கள் நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து முருகேசனை பிடித்து போலீசார் விசாரித்தபோது, இருசக்கர வாகனங்களை வட்டிக்கு அடகு வாங்கும் தொழில் செய்து வருவதாகவும், அங்கு நிற்கும் வாகனங்களை அடகு வாங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு அதன் உரிமையாளர்களை கண்டறிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
இதில் 5 வாகனங்களுக்கு மட்டும் உரிமையாளர்கள் யார்? என்பது தெரியாத நிலையில் அவை திருடப்பட்ட வாகனங்களா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் விசாரணையில், செல்வம் மற்றும் முருகேசன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், முருகேசன் ஆகியோரை கைது செய்தனர்.
மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த சில மாதங்களில் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டுபோன நிலையில் திருடப்பட்ட வாகனங்களுக்கும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரபரப்பு
இதற்கிடையே இருசக்கர வாகனம் திருடியவர் பிடிபட்டுள்ளதாகவும், மணப்பாறை போலீஸ் நிலையத்தில் நூறு வண்டிகள் உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியதையடுத்து இரு சக்கர வாகனங்களை தொலைத்த உரிமையாளர்கள் பலரும் மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு வந்து தங்கள் வாகனம் குறித்து கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.