ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு
திருவண்ணாமலையில் வெவ்வேறு இடங்களில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு இருந்தது.
திருவண்ணாமலையில் வெவ்வேறு இடங்களில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு இருந்தது.
ஆட்டோ டிரைவர்
திருவண்ணாமலை கிளியாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 27). அதேபோல் திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (24), ஆட்டோ டிரைவர்.
இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. பச்சையப்பனும், அஜித்தும் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பச்சையப்பன் இன்று இரவு சுமார் 8 மணியளவில் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை ஜங்ஷன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சுமார் 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர். அதனை அவர் தடுத்தபோது அவரது கையில் அரிவாள் வெட்டு விழுந்து உள்ளது.
விரட்டி சென்று அரிவாள் வெட்டு
பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர் அருகில் உள்ள கடைக்குள் ஓடி சென்றார். அப்போது அந்த நபர்கள் ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதேபோல் அஜித் என்பவர் அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதிக்கு அருகே வரும் போது இதே கும்பலை சேர்ந்த சிலர் அவரையும் வழிமறித்து அரிவாளால் கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இதில் இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பச்சையப்பனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவருக்கு தலை மற்றும் கைப்பகுதியை சேர்த்து மொத்தம் 18-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அவரை மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
வெட்டுக்காயம் அடைந்த அஜித்தையும் போலீசார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், திருவண்ணாமலையில் 3-க்கும் மேற்பட்ட தரப்பினர் வழிப்பறி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று கூறினர்.