தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிட மாற்றம்
சீர்காழி அருகே பள்ளியில் தேசிய கொடியை இரவில் பறக்க விட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்
சீர்காழி அருகே பள்ளியில் தேசிய கொடியை இரவில் பறக்க விட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இரவில் பறந்த தேசிய கொடி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு மாணவ, மாணவிகள் 25 பேர் படித்து வருகிறார்கள்.
கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தையொட்டி அந்த பள்ளியில் தலைமை ஆசிரியரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வீடு திரும்பினர்.
ஏற்றப்பட்ட தேசிய கொடி மாலை 6 மணிக்கு இறக்கப்பட வேண்டும் என்பது மரபு. ஆனால் அன்று இரவாகியும் தேசிய கொடி, கம்பத்தில் இருந்து முறைப்படி இறக்கப்படவில்லை. இரவிலும் தேசிய கொடி பறந்தது.
பணியிட மாற்றம்
இது தேசிய கொடியை அவமதித்தது போன்றது என கூறி, இரவில் தேசிய கொடி பறந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை விஜயா மற்றும் இடைநிலை ஆசிரியர் பிரியதர்ஷினி ஆகிய 2 பேரையும் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் அம்பிகாபதி உத்தரவிட்டார்.