2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை


2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

தென்காசி

செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த ராமையா மனைவி சுப்பம்மாள் (வயது 69). இவரது கணவர் ராமையா இறந்து விட்டார். அவருக்கு சொந்தமான இடத்தில் சுப்பம்மாள் வீடு கட்டிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சந்தனகுமார், மணிகண்டன் உள்பட 6 பேர் அங்கு சென்று சுப்பம்மாளிடம் இடத்தை அளந்த பிறகு வீடு கட்ட வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு சுப்பம்மாள் எனது இடத்தில் தானே வீடு கட்டுகிறேன் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சுப்பம்மாளை கண்டபடி திட்டினார்கள். மணிகண்டன், சந்தனகுமாரிடம், இவளை வெட்டிக் கொல் என்று கூறவே சந்தனகுமார் அரிவாளால் சுப்பம்மாளின் தலையில் வெட்டி உள்ளார்.

இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ரஸ்கின் ராஜ் விசாரித்து மணிகண்டன், சந்தனகுமார் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஒருவர் இறந்து விட்டார். மேலும் 3 பேர் மீது வழக்கு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மாரி குட்டி ஆஜரானார்.



Next Story