காவிரி, பவானி ஆற்றில் தலா 2 இடங்களில் மாசு அளவீடு கருவி பொருத்தப்படும்;சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் தகவல்
காவிரி மற்றும் பவானி ஆற்றில் தலா 2 இடங்களில் மாசு அளவீடு கருவி பொருத்தப்படும் என்று சுற்றுச்சூழல் பொறியாளர் உதய குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி மற்றும் பவானி ஆற்றில் தலா 2 இடங்களில் மாசு அளவீடு கருவி பொருத்தப்படும் என்று சுற்றுச்சூழல் பொறியாளர் உதய குமார் தெரிவித்துள்ளார்.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்
ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளிலும், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி -அரக்கன்கோட்டை வாய்க்கால்களும் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாய, சலவை, தோல் ஆலைகள், காகித ஆலைகள் உட்பட பல்வேறு ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஆறு மற்றும் நீர் நிலைகளில் கலக்கிறது.
இதனை கண்காணிக்க காலிங்கராயன் வாய்க்காலில் 3 இடங்களில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாசு அளவீடு செய்யும் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கருவி அளவீடு செய்து, ஆன்லைனில் ஈரோடு மற்றும் சென்னையில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு அளவீட்டை தெரிவிக்கும். இதற்கிடையில் பவானிசாகர் அணையிலும், பவானி ஆற்றிலும் ஆலை கழிவுகள் திறக்கப்படுவதால், கருப்பு நிறமாக தண்ணீர் செல்வதாக புகார் எழுந்தது.
தொடர்ந்து கண்காணிப்பு
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் கூறியதாவது:-
பவானிசாகர் அணையில் ஆலை கழிவு அல்லது மாசுபட்ட தண்ணீர் கலப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அணைக்கு மேல் பகுதி, அணை மற்றும் அணையில் இருந்து பவானி ஆற்றில் செல்லும் தண்ணீர் என அனைத்து இடங்களிலும் தொடர்ந்து தண்ணீரில் டி.டி.எஸ். (டோட்டல் டிஸால்விடு சால்ட்) உள்ளிட்ட கலப்பு குறித்து பரிசோதித்தோம். அப்போது, அப்படியே குடிக்கும் அளவில் தண்ணீர் உள்ளதை கண்டறிந்தோம். தொடர்ந்து மாசுபாடு ஏற்படுகிறதா? என்பதை கண்காணித்து வருகிறோம். அணைக்கு பல இடங்களில் இருந்து அடித்து வரப்படும் மண் உள்ளிட்டவை மக்கி, அதன் மூலம் கியாஸ் அல்லது கருப்பு நிறமாக வெளியேறி இருக்கும் என கருதுகிறோம்.
மாசு அளவீடு கருவி
மேலும், மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் காவிரி ஆற்றில் 2 இடங்கள், பவானி ஆற்றில் 2 இடங்கள் கண்டறியப்பட்டு, மாசு அளவீடு கண்டறியும் கருவி அமைக்க உள்ளோம். இதற்கான அனுமதி பெறப்பட்டு, கருவிகள் வந்ததும் பொருத்தப்படும்.
இந்த கருவியில் இருந்தும் அளவீடுகள், ஈரோடு மாவட்ட அலுவலகத்துக்கும், சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரிய ஆணைய அலுவலகத்துக்கும் ஆன்லைனில் சென்றடையும். கூடுதலாக சில இடங்களில் வைக்கலாம் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம், மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரைத்தால், பரிசீலிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.