சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் சுட்டுக்கொலை
சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
சென்னை,
நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த என்கவுண்ட்டர் பற்றிய விவரம் வருமாறு:-
அ.தி.மு.க. பிரமுகர் கொலை
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்திபன் (வயது 53). அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவையின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர், கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி அன்று பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவில் திடல் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது 6 பேர் கொண்ட கும்பல் இவரை ஓட, ஓட விரட்டி வெட்டி கொன்றது. பார்த்திபன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாடியநல்லூர் பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
தலைமறைவான ரவுடிகள்
இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது கூலிப்படை தலைவனும், பிரபல ரவுடியுமான செங்குன்றம் சோலையம்மன் காந்தி நகரை சேர்ந்த முத்து சரவணன் (வயது 32) மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியும், பிரபல ரவுடியுமான சோழவரம் ஞாயிறு கிராமத்தை சேர்ந்த சண்டே சதீஷ் (31) ஆகியோர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த வழக்கில் இவர்களது கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய 2 பேர் மட்டும் போலீசார் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
இதற்கிடையே ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகள் கொட்டம் அதிகரித்து விட்டதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 10 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். ஆவடி போலீஸ் கமிஷனரக சரகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியத்தை ஒழிக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து கூடுதல் டி.ஜி.பி. அருண் ஆலோசனையின் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் ரவுடி ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட தொடங்கினார்.
அந்த வகையில், அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்கில் தலைமறைவான முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகியோரை பிடிப்பதற்கு ஆவடி உதவி கமிஷனர் அன்பழகன் தலைமையில் ஒரு தனிப்படையும், பூந்தமல்லி உதவி கமிஷனர் ஜவஹர் தலைமையில் மற்றொரு தனிப்படையும் என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சுற்றி வளைப்பு
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே மீஞ்சூர் -வண்டலூர் பைபாஸ் சாலையையொட்டி அமைந்துள்ள கேமாரம்பேடு கண்டிகையில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் முத்து சரவணனும், சண்டே சதீசும் பதுங்கி இருப்பதாக உதவி கமிஷனர் ஜவஹர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தனிப்படையில் கொரட்டூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ், செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சாய்கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீஸ்காரர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முத்து சரவணன், சண்டே சதீஷ் பதுங்கி இருந்த பாழடைந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். 2 பேரையும் சரண் அடையுமாறு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். அரை மணி நேரமாக போலீசார் குரல் எழுப்பியும் எதிர் தரப்பில் இருந்து நிசப்தம் நிலவியது.
போலீசை நோக்கி துப்பாக்கிசூடு
இதைத்தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் தனிப்படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் அந்த கட்டிடத்துக்கு உள்ளே செல்ல முற்பட்டார். அப்போது திடீரென்று அந்த கட்டிடத்தில் இருந்து முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆக்ரோஷமாக வெளியே வந்தனர். தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர்.
இதில் வெளியேறிய குண்டுகள் பாய்ந்து போலீஸ்காரர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகிய3 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குண்டுகள் அவர்களது உடலை துளைக்கவில்லை.
என்கவுண்ட்டர்
முத்து சரவணனும், சண்டே சதீசும் தொடர்ந்து ஆக்ரோஷமாக இருந்ததால், இன்ஸ்பெக்டர் ரமேஷ் தற்காப்பு நடவடிக்கையாக தனது துப்பாக்கியால் 3 ரவுண்டு சுட்டார். துப்பாக்கியில் இருந்து சீறி பாய்ந்த தோட்டாக்கள் முத்து சரவணனின் மார்பை அடுத்தடுத்து துளைத்தது. இதில் அவர் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் 'என்கவுண்ட்டர்' முறையில் வீழ்த்தப்பட்டார். தனது தலைவன் தன் கண்முன்னே போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானதை கண்டு சண்டே சதீஷ் கலங்கினார்.
பின்னர் அவர் போலீசாரை நோக்கி மீண்டும் துப்பாக்கியை நீட்டினார். அவர் சுடுவதற்குள் செங்குன்றம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தனது துப்பாக்கியை எடுத்து அதிரடியாக சுட்டார். சீறி பாய்ந்த துப்பாக்கி குண்டு சண்டே சதீஷ் தலையை துளைத்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அவரும் சுருண்டு விழுந்து இறந்தார். சினிமாவை மிஞ்சும் வகையில் இந்த சம்பவம் அரை மணி நேரத்தில் அரங்கேறி முடிந்தது. 'என்கவுண்ட்டர்' முறையில் சுட்டு வீழ்த்தப்பட்ட 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பல்வேறு கொலை வழக்குகள்
என் கவுண்ட்டரில் பலியான ரவுடி முத்து சரவணனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகும். இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள், 8 வழிப்பறி வழக்குகள் உள்ளது. ரியல் எஸ்டேட் அதிபர்கள், இரும்பு வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபரை மிரட்டி பணம் வசூலிப்பதை தொழிலாக செய்து வந்தார்.
கடந்த ஆண்டு மடிப்பாக்கத்தில் தி.மு.க. வட்ட செயலாளர் செல்வத்தை கொலை செய்த வழக்கில் முத்து சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் கொலைக்கு மூளையாக செயல்பட்டார்.
இவருடன் என்கவுண்ட்டரில் பலியான மற்றொரு ரவுடி சண்டே சதீஷ் மீது 5 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள், 4 வழிப்பறி வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சதீஷ் பெயருக்கு முன்பு 'சண்டே' என்ற அடைமொழி எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் கூறுகையில், சோழவரம் அருகே உள்ள ஞாயிறு கிராமத்தில் சதீஷ் வசித்து வந்தார். ஞாயிறு என்றால் ஆங்கிலத்தில் 'சண்டே' என்பதால், தனது ஊர் பெயரை ஆங்கிலத்தில் அடைமொழியாக வைத்து வலம் வந்துள்ளார்' என்று தெரிவித்தனர்.
டி.ஜி.பி., கமிஷனர் நலம் விசாரிப்பு
முத்து சரவணன், சண்டே சதீஷ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த போலீஸ்காரர்கள் 3 பேருக்கும் பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் போலீஸ்காரர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், லிவி பிரபு ஆகிய 3 பேரையும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.