வருவாய் உதவியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
வரிவசூலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வருவாய் உதவியாளர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து சீர்காழி நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சீர்காழி:
வரிவசூலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வருவாய் உதவியாளர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து சீர்காழி நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.2 லட்சம் முறைகேடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகபாண்டியன் (வயது42), மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் சேதுராஜன் (54). இவர்கள் 2 பேரும் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தபோது பொது மக்களிடம் இருந்து வசூலித்த வரிப்பணம் ரூ.2 லட்சத்தை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தாமல் முறைகேடு செய்தாக தெரிகிறது.
புகார்
இந்த நிலையில் கடந்த 28-ந்் தேதி சீர்காழி நகர்மன்ற கூட்டம் நடந்தது. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் கடந்த 3 ஆண்டுகளாக மக்களின் வரி பணத்தை முறைகேடு செய்த வருவாய் உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தனர்.
இதன் அடிப்படையில் சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன் விசாரணை நடத்தினார். விசாரணையில் வருவாய் உதவியாளர்கள் முருகபாண்டியன், சேதுராஜன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து வரி வசூல் செய்த பணத்தை, நகராட்சி அலுவலகத்தில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
வருவாய் உதவியாளர்கள் பணியிடை நீக்கம்
இதனைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட வருவாய் உதவியாளர்கள் முருகபாண்டியன், சேதுராஜன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே இவர்கள் வேதாரண்யம் நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றியபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.