காரில் கடத்தி சென்றவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
கூடலூர் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அவரை காரில் கடத்தி சென்றவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்,
கூடலூர் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அவரை காரில் கடத்தி சென்றவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவி
நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பைக்காரா அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி, ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்வு நடைபெற்று வருவதால் நேற்று முன்தினம் வழக்கம்போல் மாணவி பள்ளிக்கூடத்துக்கு சென்றார். ஆனால், மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது அங்கர்கோடு பகுதியில் புதருக்குள் மாணவி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு மாணவி இறந்து கிடந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். மேலும் மாணவியின் உடலில் காயம் இருந்ததையும், அலங்கோலமாக இருப்பதையும் கண்டனர்.
கழுத்தை நெரித்து கொலை
இதுகுறித்து பைக்காரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த மாணவியின் உடல் அருகே கார் ஒன்று நின்றிருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு கும்பல் காரில் மாணவியை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் அந்த கார் கக்கோடி மந்து பகுதியை சேர்ந்த ராஜினேஷ் (வயது 25) என்பவருக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மாணவி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர்.
தனிப்படை அமைப்பு
இதற்கிடையே மாணவியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள், மாணவியின் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவியை காரில் கடத்தி சென்று கொலை செய்த நபர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசிலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
உறவினருக்கு வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் கூறும்போது, தலைமறைவாக உள்ள ராஜினேஷ் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவர் கொலையான மாணவியின் உறவினர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். நேற்று முன்தினம் ராஜினேஷ் சந்தேகப்படும் படி காரில் வந்து உள்ளார். இதை பார்த்த சிலர் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதனால் அவர் காரை நிறுத்தி விட்டு சென்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ராஜினேசை பிடித்தால் மட்டுமே, எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும் என்றனர்.