வீடு, வயலில் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டது
வீடு, வயலில் புகுந்த 2 பாம்புகளை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள நந்திபெண்டா பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 50). இவருக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை நடைபெற்றது. பெண் தொழிலாளர்கள் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நெற்பயிருக்குள் மலைப்பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
இதே போல்நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த கண்ணபிரான் (40) என்பவரது வீட்டில் நேற்று நல்ல பாம்பு நுழைந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர். பின்னர் இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் இருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.