2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
நீலகிரியில் ஒரே நாளில் 2 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரியில் ஒரே நாளில் 2 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
குழந்தை திருமணம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புதுமந்து பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் 2 பேரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதுகுறித்து அவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறினர்.
தொடர்ந்து இருவீட்டாரின் பெற்றோரும் கூடி பேசி, அவர்களுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். அதற்காக நாளும் குறிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று 17 வயது சிறுமிக்கு திருமணம் நடப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்தனர்.
தடுத்து நிறுத்தம்
அதன் பேரில் சமூக நல அதிகாரி பிரசன்ன தேவி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவீட்டாரின் பெற்றோரிடம் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற, அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை திருமணம் செய்யமாட்டோம் என பெற்றோர் ஒப்புதல் கடிதம் கொடுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.
இதேபோல் நடுவட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கொடைக்கானல் பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நேற்று நடைபெற இருந்தது. இதையடுத்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், அந்த திருமணத்தையும் தடுத்து நிறுத்தினர். மேலும் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து தெரிந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.